இந்திய தேசிய கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகள், திராவிடக் கட்சிகள், சாதிவாரிக் கட்சிகள், இனவாரிக் கட்சிகள், மதவாரிக் கட்சிகள், மொழிவாரிக் கட்சிகள், நடிகர்களின் கட்சிகள், பணம் படைத்தவரின் கட்சிகள், என பலநூறு கட்சிகள், மலிந்து கிடக்கும் நம் தமிழகத்தில் ஏன் மற்றுமொறு கட்சி? கட்சி என்றாலே மக்களை விலைக்கு வாங்குவது, சாக்கடை, ஊழல் மண்டி, ஏமாற்றுபவர்கள் என பல எண்ண ஓட்டங்கள் தோன்றலாம். இப்படிப்பட்ட எண்ணங்கள் உருவாக்கப் பட்டவையே தவிர அரசியல் அது தன்னிலே கொண்ட அங்கம் கிடையாது. “நீ” அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலே உருவாக்கப்பட்ட ஓர் பயங்கரமான பிம்பம்.

அரசியல் ஓர் ஆக்கப்பூர்வமான மனித சக்தி. அது உன்னிலிருந்து தோன்ற வேண்டும். போராட்டங்கள், விழிப்புணர்வு, தனிமனித மாற்றம், சகோதார உதவி, இவைகள் கண்டிப்பாக இந்த சமூதாயத்தை மாற்றும், தரமான ஓர் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் இம்மி அளவும் சந்தேகமில்லை. “ஆனால்” நம்முடைய இந்த உழைப்புகள், மாற்றத்தை தேடிச் செல்லும் அந்த பயணம் பலன் தரும் அந்த பொழுதில் “இத்தமிழகம் சுடுகாடாய் போயிருக்கும்”. நாம் நம்மைப் பற்றி, நம் பிள்ளைகளைப் பற்றி, அவர்களின் எதிகாலத்தைப் பற்றி சிந்தித்து, விழிப்புணர்வு பெற எத்தனிக்கும் தருணத்தில் இந்த தமிழகம் கயவர்களால் கொள்ளைப் போகிறது என்பதை நாம் உணரத் தவறினோமென்றால் நாமே ஏமாளிகள். போராட்டங்கள் என்றாலும், தேவைகள் என்றாலும் போகும் உயிர் நமதே. வீதி வருவதும் நாமே வீணாய்ப் போவதும் நாமே! அது ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, மீத்தேன், கெயில், அனுஉலை, அனுஉலைக்கழிவு, ஸ்டெர்லைட், நிலத்தடி நீர் சுரண்டல், நீர் நிலை ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, கல் குவாரி, கிரானைட், விவசாயி தற்கொலை, எட்டுவழிச் சாலை, உயர் மின் கோபுரம், மீனவர் படுகொலை, ஈழத்தமிழர் அகதிகள், நீட் தேர்வு, ஒரே கல்விக் கொள்கை, ஒரே ரேஷன், வேலையில்லா திண்டாட்டம்  என எதுவானலும் நாம் போராடிகொண்டு தான் இருக்கவேண்டும். ஆனால் கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகள், அதிகாரம் படைத்தவர்கள், கார்பரேட்டு கம்பெனிகள் முறையே தன்னிலை இழக்காமல் செழுமையுடன் வாழ்கின்றன என்பதே நிதர்சணமான உண்மை. நேற்று நம் பெற்றோர்கள், இன்று நாம், நாளை நம் பிள்ளைகள் உயிர் கொடுக்க வேண்டிவரும், நாம், நம் சமூதாயம் வாழ அல்ல, இந்த பணவிழுங்கிகள் சுகமாய் வாழ.

எனவே என் தோழமையே!

 “விழித்தெழு… வேட்கைக் கொள்… எதிர்த்து நில்… அரசியல் அதிகாரம் நம் கையில் வரும்வரை….” 

சாமானியன் கையில் அதிகாரம் தவழ வேண்டும். அதிகாரம் சர்வதிகாரம் படைக்க அல்ல சர்வத்தையும் அதிகாரத்துடன் நமக்காக படைக்க.  இந்த கட்சி “நாளைய தமிழகம்” நாளைய தமிழகம் அமைதியாய் வாழ்ந்திட, இயற்கை வளங்களுடன் வாழ்ந்திட, விவசாயம் செழித்திட, கல்வி தழைத்தோங்கிட, தொழில்வளம் பெருகிட, மருத்துவம் மக்களை காத்திட, இயற்க்கையுடன் உயிர்கள் வாழ்ந்திட, நீ, நான், நம் பிள்ளைகள் வாழத் தகுதியான ஓர் தமிழகத்தை காத்திட அதிகாரத்தை கையிலெடுப்போம். “அதிகாரம் எம் ஆசையல்ல… பேராசை – எம் சமூகம் நலமுடன் வாழ்ந்திட.”

“அதிகாரம் எமது ஆசையல்ல….
 பேராசை  –எம் சமூகம் நலமுடன் வாழ்ந்திட.”

நாளைய தமிழகம்