முத்திரையின் விளக்கம்

இந்த உலகில் எழுதுகோலுக்கு இணையான வலிமைமிகு பொருள் ஏதேனும் உண்டோ? எழுதுகோலுக்கு இருக்கும் உரிமை மிக அரிது. எழுதுகோலுக்கு இருக்கும் அருமை மிக அழகானது. 

இது வலிமையானது: 

வலிமை என்பது அளவில் இல்லை, எழுதும் எழுத்துக்களில் தான் உள்ளது. இந்த எழுதுகோல்தான் அன்று பல போர் ஒப்பந்தங்களுக்குக் காரணமானது. அதற்கு முரணாக அமைதி ஒப்பந்தங்களுக்கும் காரணமானது. இந்த எழுதுகோல்தான் பல சரித்திர மாற்றத்திற்கு வித்திட்டது. இந்த எழுதுகோல்தான் பல கண்டுபிடிப்புகளை பாடமாக்கியது. இந்த எழுதுகோல்தான் பல எழுச்சிமிகு கவிதைகளுக்கு வித்தானது. இந்த எழுதுகோல்தான் பல தீயவர்களின் உயிரைக் குடித்து பலரின் உயிரைக் காப்பாற்றியது. எனவே, இத்தனை வலிமை பொருந்திய இந்த எழுதுகோல் யாரிடம் உள்ளது என்பதை பொருத்து அதன் வலிமை வெளிப்படும். அது நம் கைகளில் அரசாக, மாற்றத்தை ஏற்படுத்த, வளர்ச்சியை ஏற்படுத்த, வாழ்வாக்க அந்த வலிமைமிகு எழுதுகோலை நம் கைகளில் சின்னமாக மாற்றிடுவோம். புதிய அரசை ஏற்படுத்துவோம் நம் கைகளில் “எழுதுகோல்”. 

இது உரிமையானது:

வரலாற்றில், ஒவ்வொரு மனிதனும் தம் சிந்தையில் தோன்றும் எண்ணங்களை, நோக்கங்களை, ஏக்கங்களை, கோபங்களை, தேடல்களை வடிவமாக்கினான்! ஆம், எதை வேண்டுமானாலும் எழுதும் உரிமை ஏழை, பணக்காரன், நண்பன், எதிரி, தாழ்ந்தவன், உயர்ந்தவன், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என பேதமின்றி சுதந்திரமாய் கருத்துக்களைப் பதியவைக்க வல்லது. நம் கைகளில் இருக்கும் இந்த எழுதுகோல் கண்ணெதிரில் நிகழ்பனவற்றை பதியவைப்பதற்கு அல்ல, மாறாக அவற்றை மாற்றி வரலாறுப் படைப்பதற்கு.

இதுவே ஆதியும் அந்தமும்:

ஒரு குழந்தை ‘அ’ என்று எழுதக் கற்றுக்கொள்வது முதல் உயிர் விடும் வரை வாழ்க்கையை மாற்றுவது இந்த எழுதுகோல். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு, விவசாயம், தொழில்கள், கலாசரம் என வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் இது மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. சமூதாயத்தை மட்டுமல்ல தனிமனித வாழ்க்கையையும் மாற்றுவது இந்த எழுதுகோல். நம் அரசும் சமுதாயத்தை மட்டுமல்ல தனிமனிதன் ஒவ்வொருவரையும் பொருளாதார முன்னேற்றம் முதல் சமூக நிலைப்பாடு வரை உடனிருக்கும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

மாறுவோம்! மாற்றுவோம்!

மாற்றம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல மாறாக உள்ளிருந்து வருவது, “உனக்குள் இருக்கும் அந்த ‘ஒருவன்’ மாறவேண்டும்.” வெளியுலக மனிதன், பிறரின் பார்வையில் மாறியதுபோல் தோன்றலாம். ஆனால் அது மறைந்துவிடும். உள்ளிருந்து மாறுவது மங்கா சூரியனைப்போல் என்றுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும். இந்த ‘மாற்றம்’ என்னும் தீப்பிழம்பை பிறரின் வாழ்வில் பற்றவைப்பதே நம் கட்சியின் நோக்கம். கொள்கை என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, நம் செயல்களில் வெளிப்படுவது. நமக்குள் நிகழும் இந்த மாற்றம் நம்மையும் தாண்டி பிறரையும் மாற்றவேண்டும். வார்த்தைகளில் அல்ல வாழ்வில். நம் அரசியலில்….

முதலில் நாம் மாறுவோம்! பிறகு பிறரை மாற்றுவோம்! சமூகத்தை மாற்றுவோம்! 

மாறுவோம்! மாற்றுவோம்!

தனி மனித மாற்றமின்றி, மாற்றம் சாத்தியமில்லை
“உனக்குள் இருக்கும் அந்த ‘ஒருவன்’ மாறவேண்டும்.”
மாற்றத்தின் முதல் விதையாய் “நாளைய தமிழகம்”

நாளைய தமிழகம்