பல நூறு கட்சிகள் மலிந்து கிடக்க, சில கட்சிகள் வரிந்து நிற்க, ஏனடா மற்றுமொரு கட்சி? கட்சி என்பது பொதுமக்களின் காட்சிப் பொருள் தானே! ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பொருட்காட்சி போன்று ஏனடா மற்றுமொரு கட்சி? பணத்திற்கும் பதவிக்கும் பங்கு போட்டு பாமரனின் நிழலில் வாழும் நெருப்பு தானே அது. பிறகு ஏனடா மற்றுமொரு கட்சி? இலவசங்களை மட்டுமே வாரிக்கொடுத்து வாழ்க்கையை இழி நிலைக்கு இட்டுச் சென்றது தானே மிச்சம், பிறகு ஏனடா மற்றுமொரு கட்சி? என கேள்விகளும், வெறுப்புகளும் பெருகிக் கொண்டே போகலாம். ஆனால் இதோ இன்று, இங்கு, ஒரு மாற்றம். உன்னிலிருந்து தொடங்கவேண்டும். பல நூறு அநியாயங்களைக் கடந்து உன் இதயம் மாற்ற துடிக்கும் இந்த சமுதாயத்தை மாற்ற ஒரு தருணம். ஓ தமிழக அரசியலே! நீ செய்யும் செயல்களால் தமிழன் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! இதோ நாங்கள் ஒன்றிணைகிறோம். “நாளைய தமிழகமாய்”.

ஏன் இந்தக் கட்சி?

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல நம் கட்சி. என்றோ விதைத்த விதையால் துளிர்விடும் தளிராக, மண்ணை முட்டி விண்ணைத் தொட துடிக்கும் ஓர் ஆலமரம். வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்களில் பொறுமையும், புரட்சியும் என்னைப் புரட்டிப் போட்டது. ஒவ்வொரு முறையும் “ஏன் இப்படி? ஐயோ! பாவம், இதை மாற்ற யாருமில்லையா? என்று தான் விடியும்?” என்று என்னுள் விழுந்தது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, மாற்றத்திற்கான விதையும் கூட. அதிகாரம் ஒரு சங்கிலிப் போன்றது, முடிவை கண்டுபிடிப்பதற்குள் முடிந்துவிடும், சங்கிலி அல்ல நம் வாழ்க்கை. இது ஒருவனின் எண்ணம் மட்டும் அல்ல, ஒவ்வொருவரின் எண்ணம்.

இதனால் ஒரு விடிவுகாலம் பிறக்காதோ? என்ற ஏக்கத்துடன் ஏங்கும் கண்களுக்கு இந்தக் கட்சி பிறந்தது. மாற்றம் வராதா! என்று மனம் குமுறியவர்களுக்கு இந்தக் கட்சி பிறந்தது. இந்த “நாளைய தமிழகம்” மாற்றத்திற்கான பாதை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான பாதை. நாளைய தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க, இந்தக் கட்சி பிறந்தது. இது இளைஞர்களின் கட்சி, பாமரனின் கட்சி, விவசாயிகளின் கட்சி, தொழில் முனைவோரின் கட்சி, ஏழைகளின் கட்சி, படித்தவர்களின் கட்சி, வளரும் இளைய தலைமுறையினரின் கட்சி, பெண்களின் கட்சி, குழந்தைகளின் கட்சி, ஆக, இது அனைத்து மக்களின் கட்சி, தமிழ் மக்களின் கட்சி. நம்முடைய கட்சி இணைந்திடுவோம்.

நோக்கம்?

“பிரச்சனைகளை நோக்கி அல்ல! தீர்வுகளை நோக்கிய பயணம்”. நாங்கள் தமிழகத்தில் தற்போது நிலவும் பிரதான பிரச்சனைகளை முன்னிறுத்துபவர்கள் அல்ல. பிரச்சனைக்கான தீர்வுகளை ஆராய்ந்து, அதற்கான திட்டங்களை வகுத்து, செய்முறை படுத்த கூடிய தீர்வுகளை அளிக்ககூடியவர்கள். எங்களின் தீர்வுகள் நாட்டின், மாநிலத்தின் நம் மக்களின் நலனுக்காக இருக்குமேயன்றி வேறெதுவும் இருக்காது. 

விழித்தெழு…வேட்கைக்கொள் எதிர்த்து நில்
அரசியல் அதிகாரம் நம் கையில் வரும்வரை….”